இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்றது. தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமான படை முடிவெடுத்து, கடந்த பிப்ரவரி 26 அன்று தாக்குதல் நடத்தப்பட்டன. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பதிலுக்கு இந்தியா எல்லைக்குள் அத்துமீறி புகுந்து பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
ஆனால், இந்தியா விமானப் படையினர் பாகிஸ்தான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர். இன்னொரு விமானத்தை துரத்தியபோது இந்திய விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். பின்னர் 75 மணி நேரத்தில் அவரை பாகிஸ்தான் விடுவித்தது.  
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானுக்கு சூழ்ந்துள்ள ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்று கூறியிருக்கிறார். இஸ்லாமாபாத்தில் அவர் மேலும் கூறும்போது, “இந்தியாவில் தேர்தல் முடியும் வரை பாகிஸ்தானை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி அரசு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு எல்லா விதங்களிலும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இம்ரான்கான் பேசியதாகக் கூறப்படும் இந்தத் தகவலை பாகிஸ்தானின் பிரபல நாளிதழ் டான் வெளியிட்டுள்ளது.