பஹல்காம் பயங்ரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதன் கராச்சி கடற்கரையில் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் அதன் கராச்சி கடற்கரையில் அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய நேரப்படி இரவு 9:30 மணியளவில் பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய தலைமை பாதுகாப்பு தொடர்பான முக்கிய அமைச்சரவைக் குழு கூட்டத்தை நடத்திய அதே நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 25 வரை ஏவுகணை சோதனை நடைபெறும் என்றும், சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்கள் இந்த நிகழ்வுகளைக் கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஏவுகணை சோதனை அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பதிலடியாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானுக்கு கடும் செய்தியை வழங்க, 1960 ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும், அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும் என்றும் இந்தியா புதன்கிழமை அறிவித்தது.
வெளியுறவுத்துறை நடவடிக்கை:
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். SAARC விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். புதன்கிழமை கூடிய அமைச்சரவைக் குழுவிற்கு, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததற்காக துக்கம் அனுசரித்தனர். இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
செவ்வாய்க்கிழமை பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல், 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். 2019ஆம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தப் பகுதியில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலில் 25 இந்தியர்களும் ஒரு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
