Pakistan like India decided to sell the airline service to private
இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் அரசும் அந்நாட்டுக்கு சொந்தமான பொதுத்துறை விமான நிறுவனமான பாகிஸ்தான் ஏர் லைன்ஸ்-ஐ தனியார் மயமாக்க முடிவு எடுத்துள்ளது.
நட்டத்தில் இயங்கி வரும் இந்திய பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது போலவே பாகிஸ்தான் ஏர்லைன்சும் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் டானியல் அலிஸ், "பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
நவாஸ் ஷெ ரீப் பிரதமராக இருந்தபோதே இந்த நடவடிக்கை தொடங்கியது. எனினும், பல்வேறு கட்டங்களில் தனியார் மயமாக்குவது ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டில் மாதம் ஒன்றிற்கு 30 மில்லியன் டாலர் வீதம் 186 பில்லியன் அளவிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதற்கான வரையறை பிரதமர் ஷாஹித் காகன் அபாஸி தலைமையிலான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னர் தனியார் மயமாக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தானில் வரும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னரே இந்த தனியார் மயமாக்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எமிரேட்ஸ், எதியாத் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஐஏ பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது கூடுதல் தகவல்.
