பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகவும், தாக்குதல் உள்நாட்டில் இருந்தே வளர்க்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் முதல் எதிர்வினை வெளியாகியுள்ளது. தாக்குதலில் 26 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்:
இந்த அறிக்கையை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் உள்நாட்டில் இருந்தே வளர்க்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. "இந்தியாவில் நாகாலாந்து, மணிப்பூர், காஷ்மீர், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசுக்குத் எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. அரசாங்கம் பலரைச் சுரண்டி வருவதால் இந்தத் தாக்குதலுக்கான காரணம் உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டது" என்று ஆசிப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"நாங்கள் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. பயங்கரவாதிகள் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது கூடாது. அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இரங்கல்:
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்," என்று அவர் கூறினார்.
