காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை  இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானுக்குள் புகுந்து  தாக்குதல் நடத்தியது. 

இதில் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.  ஆனால் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை, இது இந்தியாவின் பிரசாரமாகும், இந்திய விமானப்படைகள் எல்லைக்கட்டுப்பாடு கோடை தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டது என பாகிஸ்தான் கூறியது. மறுபுறம் எல்லையை தாண்டிய இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க எங்களுக்கும் உரிமை உள்ளது என கூறியது.

இந்நிலையில் எல்லையில் நவ்சேகரா மற்றும் அர்னூர் செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவிற்கு விரைவில் பதிலடி கிடைக்கும், அதிர்ச்சிக்கு காத்திருங்கள் என பாகிஸ்தான் ராணுவம் மிரட்டியுள்ளது.பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு சரியான நேரத்தில் பதிலடியை கொடுப்போம். இந்தியா ஒருபோதும் எங்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. நாங்கள் பதிலடிக்கு தயாராக உள்ளோம், விரைவில் அதிர்ச்சி கிடைக்கும் என பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் மக்களை குறிவைத்துதான் இந்தியா தாக்குதலை நடத்தியது எனவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே இந்தியாவின் அத்துமீறல் குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளிடம் முறையிடப் போவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.