ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். Poonch, Rajouri ஆகிய மாவட்டங்களில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகளைக்‍ கொண்டும், துப்பாக்கிகளால் சராமாரியாக சுட்டும் இன்று தாக்குதல் நடத்தினர்.

இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்‍கு எதிராக செயல்பட்டுவந்த பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக்‍ குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய Surgical Strike தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய 60-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Anantnag மாவட்டம் Kapamark பகுதியில், 2 பள்ளிகளுக்‍கு பிரிவினைவாத இயக்கத்தினர் இன்று தீ வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், பள்ளி கட்டடங்களின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. மாணவர்களின் கல்வியை சீர்குலைக்‍கும் தீய நோக்‍கத்துடன், பள்ளிக்‍ கட்டடங்களுக்கு தீவைத்த பிரிவினைவாதிகளின் கொடூரச் செயலுக்‍கு பெற்றோர்களும், பொதுமக்‍களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.