ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைக்‍கோட்டுப் பகுதியில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்திய ராணுவத்தினரும் தக்‍க பதிலடி கொடுத்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தால், தொடர்ந்து 3 மாதங்களுக்‍கும் மேலாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்‍கல் ஸ்டைரைக்‍ தாக்‍குதல் நடவடிக்‍கைக்‍கு பழிதீர்க்‍கும் விதமாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்‍குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜோரி மாவட்டம் மஞ்சகோட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது, பாகிஸ்தான் படையினர், இயந்திர துப்பாக்‍கியால் சுட்டும், ராக்‍கெட் குண்டுகளை வீசியும் தாக்‍குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவம் தக்‍க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து கடும் துப்பாக்‍கிச் சண்டை நடைபெற்று வருவதால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.