ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

10 civilians Killed in Pakistan Army Firing : ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த ஷெல் தாக்குதலால் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டதுடன் பல வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து வந்த காட்சிகளில், உடைந்த ஜன்னல் பலகைகள், விரிசல் விழுந்த சுவர்கள் மற்றும் கிராமத்தின் சாலைகளில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் காணப்பட்டன. மக்கள் தங்கள் உடைமைகளை சேகரிக்க முயற்சிப்பதைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லை (IB)க்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் ஆத்திரமூட்டும் வகையில், தன்னிச்சையாகவும், பாகுபாடு இல்லாமலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தியா அதிகாலை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஆத்திரமூட்டும் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத முகாம்களை தகர்த்த இந்தியா

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற துல்லியத் தாக்குதல்களை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த போர் நிறுத்த மீறல் நிகழ்ந்தது. பஹவல்பூர், முரிட்கே மற்றும் சியால்கோட் உட்பட பாகிஸ்தானுக்குள் நான்கு இடங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஐந்து இடங்களிலும் என மொத்தம் ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுள்ளன.

முப்படைகளின் தாக்குதல்

இந்த நடவடிக்கை இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் நடவடிக்கையை இரவு முழுவதும் கண்காணித்ததாக ANI வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஒன்பது இலக்குகளும் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பஹல்காமில் நடந்த "காட்டு மிராண்டித்தனமான" பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.