ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. LeT அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளுக்கு உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பஹல்காமைச் சேர்ந்த பாட்கோட்டை சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற்றும் ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
என்.ஐ.ஏ. அறிக்கை
தடை செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்புடன் தொடர்புடைய மூன்று ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுக்கு இவர்கள் தங்குமிடம், உணவு மற்றும் தளவாட உதவிகளை வழங்கியதாக என்.ஐ.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு முன்னர், இந்த இரண்டு குற்றவாளிகளும் பயங்கரவாதிகளை ஹில் பார்க் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக கொட்டகையில் (dhok) மறைத்து வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
என்.ஐ.ஏ.வின் கூற்றுப்படி, விசாரணையின் போது, பர்வேஸ் மற்றும் பஷீர் ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியதுடன், அவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தினர்.
பஹல்காம் தாக்குதல்:
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் மத அடையாளத்தின் அடிப்படையில் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகளை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அண்மைய ஆண்டுகளில் அப்பகுதியில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.
கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967, பிரிவு 19-இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
