பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, மத்திய அரசு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட உள்ளது. இந்தக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்று தெரிகிறது. இதில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு தலைவர் கலந்துகொள்வார்வார்கள். இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசியதாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கூட்டத்தில் கலந்துகொள்ள தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ராஜ்நாத் சிங் தலைமை தாங்குவார்:

இந்தக் கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு சிறிய கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, புதன்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

யார் யார் கலந்துகொள்வார்கள்?

இந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திமுக - திருச்சி சிவா

திரிணாமுல் காங்கிரஸ் - சுதிப் பந்தோபாத்யாய்

தெலுங்கு தேசம் - லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு

சிவசேனா - ஸ்ரீகாந்த் ஷிண்டே

ஜேடியு - சஞ்சய் ஜா

ஆர்ஜேடி - ஏடி சிங் அல்லது மனோஜ் ஜா

பாதுகாப்புத்துறை ஆலோசனை:

புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தின்போது, ​​தாக்குதல் குறித்து பிரதமரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினார். அதன் பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணியளவில் முடிவடைந்த இந்தக் கூட்டம், பிரதமரின் 7, லோக் நாயக் மார்க் இல்லத்தில் நடைபெற்றது.