padmaavat movie agitators fire tamilnadu lorry
பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் தமிழக லாரி ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும் படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றம் செய்தும் திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.
எனினும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் இப்படத்துக்கு தடை விதித்ததால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது. இதில் இப்படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து பத்மாவத் திரைப்படம் நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ராஜஸ்தானில் படம் வெளியாகவில்லை.
படம் வெளியான மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவத் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், தமிழக லாரி ஒன்றுக்கு மத்திய பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான லாரி, சரக்குகளை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு சென்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பத்மாவத் படத்தின் எதிர்ப்பாளர்கள் சிலர், லாரியிலிருந்து ஓட்டுநர் மற்றும் கிளீனரை இறக்கிவிட்டு லாரிக்கு தீ வைத்து எரித்துள்ளனர். லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது. லாரியில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருளுடன் சேர்த்து லாரியும் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
