கேரள மாநிலம் கொச்சினில் முற்போக்கு பெண்கள் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் இந்த சமூகத்தில் நிகழும் ஒடுக்குமுறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் , பாலியல் வன்முறைகள் இவற்றிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெண்களை புனிதமாக்குவதும், தீட்டு என்று ஒதுக்கிவைப்பதும் அவர்கள் மீது நிகழ்த்தக்கூடிய வன்முறையே . கடவுள் என்பதே கட்டுக்கதை அதிலும் பெண்கள் தீட்டானவர்கள் அவர்கள் கோயிலுக்குள் வருவதற்கு அனுமதியில்லை என்பது எவ்வளவு பிற்ப்போக்குத்தனம். இங்கு பெண்கள் மீது அனைத்துவிதமான பிம்பங்களையும் கட்டமைத்துவிட்டு பிறகு அவர்களை தீண்டத்தகாதவர்களாக கட்டமைப்பது இந்தியா முழுவதும் இருக்கும் மதங்களின் பெயரால் மட்டுமே. இதை பெண்கள் உணரவேண்டும்.

கேரளாவில் முற்போக்கு இளைஞர்கள் , பெண்கள் அமைப்பினர் இப்படி ஒன்றிணைந்து ஆதிக்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவது மகிழ்ச்சியை தருகிறது. நம் வீட்டிற்குள்ளே சமத்துவம் இல்லை , முதலில் சமத்துவத்தை வீட்டிலிருந்தே துவங்குவோம் என்றார்.

நிகழ்ச்சியில் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழுவினரின் புரட்சிகர பாடல்களுக்கு கலந்துகொண்ட மக்கள் அனைவரும் ஆடிப்பாடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். குறிப்பாக " நான் தாடிக்காரன் பேத்தி" ஐயாம் சாரி ஐயப்பா நான் உள்ளவந்தா என்னப்பா" என்கிற பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது .

கோயிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி கிடைத்தும் இன்னும் சுதந்திரமாக செல்லமுடியாத சூழலில் பெண்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாடிய இந்த பாடலை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வெகுவாக வரவேற்றனர்.