p chithambaram speech against to modi
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை மோடி அரசு இப்போதாவது ஒப்புக்கொள்ளுமா ? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில், ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரையில், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியது, வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது என அனைத்தையும் கடுமையாகக் கண்டித்து தநது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த கட்டுரை குறித்தும், யஷ்வந்த் சின்ஹா கூறியது குறித்தும் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “ யஷ்வந்த் சின்ஹா கூறிய உண்மைகள் வலிமையானவை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற உண்மையை துணிச்சல் இருந்தால், இந்த அரசு ஏற்றுக்கொள்ளுமா?. மத்திய அரசின் புதுப்புது விளையாட்டுகளால், மக்கள் மனதில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்தாலும் சரி, இறுதியில் உண்மையே வெல்லும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
