P Chidambaram mocks Central Govt
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்ற கட்டுரையை யஷ்வந்த்சின்ஹா எழுதியதன் மூலம் உண்மைக்கு வலுவூட்டியுள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர்யஷ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரையில், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியது, வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது என அனைத்தையும் கடுமையாகக் கண்டித்து தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த கட்டுரை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
வாய்மைக்கு வலு
நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி, கடந்த 18 மாதங்களாக கூறியதை யஷ்வந்த் சின்ஹாவும் இப்போது எழுதியுள்ளார். இதன் மூலம் அவர் உண்மைக்கு வலுசேர்த்துள்ளார். ஆனால், நாங்கள் கூறும்போதெல்லாம் எங்களை வாயடைக்க வைத்தது மத்திய அரசு. ஆனால், அரசு எடுத்துள்ள அழிவுக்குரிய பாதை குறித்து உரத்த குரலிலும், துணிச்சலாகவும் இனி நாங்கள் பேசுவோம்.
ஒளிய முடியுமா?
பொருளாதாரம் சரிவுக்கு என்ன காரணம் எனத் தெரியாமல் மத்திய அரசு திக்கற்ற நிலையில் இருக்கிறது. பிரதமர் மோடியின் வார்த்தை ஜாலப் பிரசாரத்துக்கு பின்புறம் எத்தனை நாட்களுக்கு மத்திய அரசு ஒளிந்து கொள்ள முடியும்?
காங்கிரஸ் கட்சி யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்களை அரசியல் ரீதியாக பயன்படுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்களின் கருத்துக்கள், எதிர்க்கட்சியாக நாங்கள் என்ன கூறினோமோ அதை ஒத்து இருக்கிறது.
எம்.பி.க்கள் அச்சம்
ஏகப்பட்ட எலும்பு முறிவுகள் நடந்தபின் மருத்துவம் செய்து கட்டு கட்டுவதுபோல், பொருளாதார சரிந்துவிட்டபின், புதிய பொருளாதார கவுன்சிலை இப்போது மத்திய அரசு அமைத்துள்ளது. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் பார்த்தவற்றையும், கேட்டவற்றையும் பிரதமர் மோடியிடம் கூறுவதற்கு அச்சப்படுகிறார்கள். இது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம். இன்னமும் நாம் சுதந்திரமான நாடு என்று கூறிக்கொண்டு இருக்கிறோம்.
கொள்ளை
பெட்ரோல், டீசலுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி மத்திய அ ரசு சாமானிய மக்களின் சட்டைப் பைகளில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
