ஒருவருக்கு தங்கள் நம்பிக்கையை, வழிபாட்டு உரிமையை வெளிப்படுத்தும் அதிகாரம் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு ஒருவரின் கருத்துரிமை, மத உரிமை, மத உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தடை செய்கிறது.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு
இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 3 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். அதில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும் தெரிவித்தனர். இதனையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர் கருத்து வரும் நிலையில் அசாதுதின் ஓவைசி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கொதிக்கும் ஓவைசி
இது தொடர்பாக அவர் கூறுகையில்;- கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் கொடுத்த தீர்ப்பை நான் ஏற்க மாட்டேன். இது என் உரிமை. மனுதாரர்கள் மேல் முறையீடு செய்வார்கள் என்று நம்புகிறேன். எங்கள் கட்சியினர் மட்டுமின்றி, மற்ற மதத்தினரும் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இது மாட்ச் ரீதியான, கலாச்சார, ரீதியாக வழங்கப்பட்டு இருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
ஒருவருக்கு தங்கள் நம்பிக்கையை, வழிபாட்டு உரிமையை வெளிப்படுத்தும் அதிகாரம் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு ஒருவரின் கருத்துரிமை, மத உரிமை, மத உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தடை செய்கிறது. அடிப்படை உரிமைகள் பற்றி விவரங்களை நாம் இப்போது ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு கடவுள் நம்பிக்கை கொண்ட நபருக்கு எல்லாமே அவசியமான அடிப்படை உரிமைதான். ஒரு இந்து பிராமணருக்கு எப்படி பூணூல் அடிப்படை மத உரிமைகளில் ஒன்றோ அப்படித்தான். இதில் நீதிபதிகள் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இஸ்லாமிய பெண்கள் படிப்பு பாதிக்கும்
ஒரு மாதத்தில் இருக்கும் இன்னொரு நபருக்கு கூட இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. இது ஒருவருக்கும், அவரின் கடவுளுக்கும் இடைப்பட்ட விஷயம். ஒருவரின் மத உரிமை இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அதில் அரசு தலையிட முடியும். ஹிஜாப் அப்படி ஒரு பாதிப்பை யாருக்கும் ஏற்படுத்தவில்லை. ஹிஜாப் தடை மூலம் இஸ்லாமிய பெண்கள் படிப்பு பாதிக்கப்படும். இது அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
