சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. 

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. எனவே நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு தனிமைப்படுதலின் அவசியத்தை உணர்த்தி மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சிலர் அதை உதாசீனப்படுத்தி வெளியே திரிகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடும் கேரள மாநிலத்தில், ஊரடங்கு நடைமுறைக்கு வந்த முதல் நாளான இன்று ஒரே நாளில் அதை மீறிய 402 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 123 பேர் மீதும், கொல்லத்தில் 70 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மகாராஷ்டிராவும் கேரளாவும் தான். அப்படியிருக்கையில், ஊரடங்கையும் மீறி கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் பொதுவெளியில் சுற்றிய 402 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.