2024 ஆம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் குடியுரிமையைத் துறப்பதாக அரசு கூறுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டில், 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய குடியுரிமையைத் துறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதில்

காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "மத்திய அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி, 2020-ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021-ல் 1,63,370 பேரும், 2022-ல் 2,25,620 பேரும், 2023-ல் 2,16,219 பேரும், 2024-ல் 2,06,378 பேரும் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

கடந்த 2011 முதல் 2014 வரையிலான காலப்பகுதியிலும், ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குடியுரிமையைத் துறந்துள்ளனர். 2011 இல் 1,22,819 பேர், 2012 இல் 1,20,923 பேர், 2013 இல் 1,31,405 பேர் மற்றும் 2014 இல் 1,29,328 பேர் இந்தியக் குடியுரிமையை வேண்டாம் என முடிவுசெய்துவிட்டனர்.

குடியுரிமையைத் துறப்பதற்கான காரணங்கள்

இந்திய குடியுரிமையைத் துறப்பதற்கான காரணங்கள், அந்தந்த தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்தது என்றும், அதுபற்றிய காரணங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், உலகளாவிய பொருளாதார சூழலில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் திறமையை அங்கீகரிப்பதாகவும், அவர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேறொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொத்த மக்கள் தொகை 3,43,56,193 ஆகும். இதில் 1,71,81,071 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) என்றும், 1,71,75,122 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.