பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஐந்து இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜீவ், கொல்லப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் உறவினரும், ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான முகமது யூசுப் அசார் அவரும் ஒருவர் என்றும் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்கள் நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களின் நோக்கம் பயங்கரவாதிகளையும் அவர்களின் உள்கட்டமைப்பையும் குறிவைப்பதாகும் என்றும் பாகிஸ்தான் பொதுமக்கள் அல்லது ராணுவ நிறுவனங்களை குறிவைப்பது அல்ல என்றும் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி கூறினார்.
இந்தியா பயங்கரவாதிகளை குறிவைத்தது, ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் பதில் தாக்குதல் நமது பொதுமக்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைப்பதாக இருந்தது என்றும் பாரதி கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் லாகூருக்கு அருகிலும், குஜ்ரான்வாலாவுக்கு அருகிலும் உள்ள ரேடார்களைத் தாக்கியதாக அவர் கூறினார்.
ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த விமானப்படைத் தளபதி, தாக்குதலில் இழப்புகளும் ஒரு பகுதி என்றும், அனைத்து இந்திய ராணுவ விமானிகளும் பத்திரமாக நாடு திரும்பிவிட்டனர் என்றும் கூறினார்.
"நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம்," என்று அவர் கூறினார். "பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கங்களை நாம் அடைந்துவிட்டோமா என்பதுதான் நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி? பதில் ஆம்." என அவர் தெரிவித்தார்.


