வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களின் வலி மற்றும் மனநிலையை புரிந்துக் கொண்டமைக்காக பிரதமருக்கு நன்றிகள். 

பிரதமர் நரேந்திர மோடி பத்து லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவது பற்றி இன்று காலை உத்தரவிட்டார். இது பற்றிய தகவல் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜ.க. எம்.பி. வருன் காந்தி நன்றி தெரிவித்து இருக்கிறார். 

“பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு துறை வாரியாக ஆட்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்து இருந்தார். இந்த ஆய்வின் படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் பேரை அரசு பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டு இருக்கிறார்,” என பிரதமர் அலுவல ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வெளிப்படையான கருத்து:

தனது சொந்த கட்சி என்றும் பாராமல், அரசுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர் தான் வருண் காந்தி. இவர் இன்று காலை வெளியான பிரதமர் அலுவல ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில், “வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களின் வலி மற்றும் மனநிலையை புரிந்துக் கொண்டமைக்காக பிரதமருக்கு நன்றிகள். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், பல்வேறு பணிகளுக்காக காலியாக இருக்கும் சுமார் ஒரு கோடி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்ற வகையில் அர்த்தமுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பணிகள் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என குறிப்பிட்டு இருக்கிறார். 

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 60 லட்சம் பணியிடங்கள் குறித்து தகவல் சேகரித்து அவற்றை பொது வெளியில் தெரிவித்து இருந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார். மேலும் ஒவைசி பேசிய வீடியோவையும் தனது ட்விட்டர் பதிவில் அவர் இணைத்து இருந்தார். வீடியோவில் ஓவைசி காலி பணியிடங்கள் பற்றிய தகவல்களை எண்ணிக்கை வாரியாக பட்டியலிட்டுக் காட்டும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.