ரயில்வே குரூப் D வேலைவாய்ப்புக்கு 1.08 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. மும்பையில் இருந்து அதிகபட்சமாக 15.59 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, அதைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் சென்னை.
CEN 08/2024 அறிவிப்பின் கீழ் குரூப் D வேலைவாய்ப்புக்கு 1.08 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ளது. குறிப்பாக, RRB ஆல் பிரிக்கப்பட்ட பல்வேறு பிராந்தியங்களில், மும்பையில் இருந்து அதிகபட்சமாக 15.59 லட்சம் (15,59,100) விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மும்பைக்கு அடுத்தபடியாக, சண்டிகரில் இருந்து 11,60,404 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சென்னையில் இருந்து 11,12, 922 பேர் ரயில்வே குரூப் D பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,08,22,423 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ரயில்வே குரூப் D வேலைவாய்ப்பு:
இந்திய ரயில்வே குரூப் D ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு நிலை 1 பதவிகள் உள்ளன. இதில் டிராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, அசிஸ்டன்ட் பாயிண்ட்ஸ்மேன் மற்றும் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் அடங்கும்.
இந்த குரூப் D பணிகளுக்கு மொத்தம் 32,438 காலியிடங்கள் இருப்பதாக ஆர்ஆர்பி முன்னதாக அறிவித்திருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கிறது. தேர்வு செயல்முறை மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆன்லைன் பதிவு முடிவடைந்த நிலையில், குரூப் D ஆட்சேர்ப்புக்கான தேர்வு தேதிகளை ஆர்ஆர்பி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரிப்பு:
அதிகப்படியான விண்ணப்பங்கள் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கான அதிக தேவையை எடுத்துக்காட்டுகின்றன. வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள அடிப்படை சவால்களையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை-செப்டம்பர் 2024 காலாண்டில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.4% ஆகக் குறைந்துள்ளது .
ஆனால், வேலைவாய்ப்பின் தரம் மற்றும் நிலைத்தன்மை குறித்த கேள்விகள் உள்ளன. குறிப்பாக இளைஞர்களிடையே வேலை குறித்த கவலைகள் நீடிக்கின்றன. தொழிலாளர் சந்தை குறியீடுளில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், பொருளாதார நெருக்கடிக்கு ஈடாகவே அவை உள்ளன என்று இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 குறிப்பிடுகிறது.
