மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த அவ்வப்போது எதிர்க்கட்சிகள் தங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கூட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தங்களின் பலத்தை காட்ட டெல்லியில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு பேரணி நடத்தி வருகின்றனர். 

வருகிற மக்களவை தேர்தல் வருவதையொட்டி பாஜக எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களது ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். அதேபோல மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானார்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது. 

இதற்கிடையயில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு சந்திரபாபுநாயுடு தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். 

தற்போது டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக எம்.பி., கனிமொழி, இடதுசாரி கட்சியை சேர்ந்த யெச்சூரி, டி.ராஜா, சரத்யாதவ், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பேரணியில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேரணி ஜந்தர்மந்தரில் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து இன்று மாலை ஜந்தர்மந்தரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் தர்ணா போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.