ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மீரா குமார் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதியோடு முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி கடந்த 14-ந் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, நேற்றுடன் முடிந்தது. 

ராம்நாத் கோவிந்த்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும் பீகார் ஆளுநராக இருந்தவருமான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 17-ந்தேதி மனுத் தாக்கல் செய்தார். 


மீரா குமார்

காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பில்  தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான மீராகுமார்(வயது 72) நிறுத்தப்பட்டுள்ளார். 

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது பிரசாரத்தை தொடங்கி, மாநிலம் வாரியாக அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

மனுத் தாக்கல்

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் மீரா குமார் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் மீரா குமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

முன்மொழிந்தனர்

மீரா குமாரின் வேட்புமனுவை, சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். 

பிரசாரம்

வேட்புமனுத் தாக்கல் முடிந்தநிலையில், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து மீரா குமார் நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். ஜூலை 15-ந்தேதி தனது பிரசாரத்தை மீராகுமார் நிறைவு செய்கிறார். 

16 எதிர்க்கட்சிகள்
வேட்புமனுத் தாக்கல் முடிந்தபின், நிருபர்களுக்கு மீரா குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது-
காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர். 

போர் தொடங்கியது

இன்று முதல் எங்களுடைய சித்தாந்தப் போர் தொடங்கி விட்டது. எங்களின் சித்தாந்தம் என்பது ஜனநாயக மதிப்புகள், சமூகத்தின் அனைத்து பிரிவினர்கள், பத்திரிகை சுதந்திரம், தனிமனித சுதந்திரம், வறுமை ஒழிப்பு, வௌிப்படைத்தன்மை, சாதிகட்டுமானத்தை உடைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. 

ஒற்றுமையாக எழ வேண்டும்

சித்தாந்தங்களை முழுமையாக பேசிக்கொண்டு இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருக்கிறேன். இது மிகவும் முக்கியமான நேரம் என்பதால், அனைத்து தரப்பினரும் ஒன்றாக எழுந்து நிற்க வேண்டும் என்று கேட்டு இருக்கறேன். 

இரு வழிகள்

ஏழைகள் மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை பற்றி நினைக்காமல் செல்லும் ஒரு வழி இருக்கிறது. மற்றொரு வழி என்பது, தலித்துகள், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினர், பெண்கள், தொழிலாலர்கள், அனைத்து மதத்தை சேர்ந்த மக்களை உயர்வுக்கு கொண்டுவரும் வழியாகும். 

மனசாட்சிப்படி

இந்த தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் தங்களின் மனசாட்சியின் குரலுக்கு மதிப்பு அளித்து, நாட்டை முன்னேற்றப்பாதைக்கு  எடுத்துச் செல்லும் வழியை தேர்வு செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார் 

சிந்தாந்தங்களுக்கு  இடையிலான போர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், “ எங்களைப் பொருத்தவரை ஜனாதிபதி தேர்தல் என்பது, சிந்தாந்தங்கள், கொள்கைகள், வாய்மை ஆகியவற்றுக்கு இடையிலான போர். இதில் நாங்கள் போராடுவோம்’’ என்றார். 

ராகுல்காந்தி கருத்து...
இத்தாலியில் தங்கி இருக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர்ராகுல்காந்தி டுவிட்டரில் கூறுகையில் “ நாட்டின், மக்களின் உயர்ந்த மதிப்புகளின் பிரதிநதியாக மீரா குமார் இருக்கிறார். பிரித்தாலும் சித்தாந்தத்துக்கு எதிராக இருக்கும் வேட்பாளர் மீரா குமாரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.