ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜூன் 22 ல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதைதொடர்ந்து பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், இதில் பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

பின்னர், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜூன் 22 ல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.