ரூபாய் நோட்டு தடைக்கு பின், வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்கும் முற்சியாக, நாட்டில் உள்ள ஒரு கோடி பேரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ரூபாய் தடை
ரூபாய் நோட்டு தடைக்கு பின், கணக்கில் வராத பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் குறித்து கண்டுபிடித்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
18 லட்சம் பேர்
‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் வருமான வரித்துறையினரால் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் ஏற்கனவே 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டமாக ஒரு கோடி பேரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஒரு கோடி கணக்குகள்
இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ வருமான வரித்துறையினர் தங்களுக்கென பிரத்யேகமாக வங்கிக் கணக்கு வைத்து, வருமான வரி செலுத்துவோரின் விவரங்கள் அடங்கிய தகவல் களஞ்சியத்தை வைத்துள்ளனர். அதில் இந்த ஒரு கோடி பேரின் விவரங்களை ஒப்பிட்டு பார்த்து கணக்கு எடுக்கப்படும்.
கடந்த 2014-15ம் ஆண்டுப்படி, வருமான வரித்துறை விவரங்கள் படி, 3.65 கோடி தனிநபர்கள் வருமானவரி செலுத்தி வருகிறார்கள், 7 லட்சம் நிறுவனங்கள், 9.40 லட்சம் இந்து கூட்டுக்குடும்பங்கள், மற்றும் 9.18 லச்சம் நிறுவனங்கள் வருமானவரி செலுத்தி வருகின்றன. 25 கோடிக்கும் மேல் ‘ஜன் தன்’ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
நோட்டீஸ்
இந்த அனைத்து வகையான கணக்குகளையும் ஆய்வு செய்ய வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் கணக்கில் சந்தேகத்து இடமான வகையில் டெபாசிட்கள் இருந்தால், எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்'' எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ எங்களிடம் இருக்கும் ஒரு கோடி பேரின் வங்கிக்கணக்குகளில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் குறித்து பட்டியல் எடுத்து, 18 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். இதை அதிகப்படுத்தி, இன்னும் தேடல்களையும், ஆய்வுகளும் விரிவு படுத்துவோம்.
ஆணையர்கள்
வருமானவரித்துறை அனுப்பிய இமெயில், எஸ்.எம்.எஸ். நோட்டீசுக்கு பதில் திருப்தியாக இருந்தால், வரிசெலுத்துவோர் தொந்தரவு ஆளாகமாட்டார்கள். பதில் திருப்தியாக இல்லாவிட்டால், துணை ஆணையர்கள் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பவும், விளக்கம் கேட்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
