open 7 tmc water from cavery. CM letter
காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை கை கொடுக்காததாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காததாலும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் மழை பொய்த்ததாலும் குறுவை சாகுபடி மட்டுமின்றி சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் வெறும் 20 அடியாக இருந்ததால் குறித்த காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியதால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 875 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று அணைக்கு நீர்வரத்து குறைந்து 13 ஆயிரத்து 928 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் நீர்மட்டம் 94.84 அடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீர் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்ப்டடுள்ளது.
இந்நிலையில் டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் 21 டிஎம்சி தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் போதுமானதாக இல்லை என்று தனது கடிதத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
