உபர் டாக்சியில் 6 கி.மீட்டர் மட்டுமே பயணம் செய்த சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ. 5ஆயிரத்து 325 கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்ததையடுத்து போலீஸ் நிலையம் வரை சென்று முடிக்கப்பட்டது.

மைசூரைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரவீண். பெங்களூருவில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு சாலையில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்துக்கு கடந்த புதன்கிழமை செல்ல முயன்றார்.

 அப்போது,அங்கு இருந்த KA01G0590  என்ற. பதிவு எண் கொண்ட உபர் கால்டாக்சியை சாட்டிலைட் பஸ் நிலையம் செல்ல முன்பதிவு செய்தார்.

ஏறக்குறைய ரெயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவு இருக்கும் சாட்டிலைட் பஸ் நிலையத்தை கார் சென்று அடைந்தது. அப்போது, டிரைவரிடம் கட்டணம் குறித்து கேட்டபோது, ரூ. 5 ஆயிரத்து 325 என்று பில்லை பிரவீணிடம் காட்டினார்.

இதைப் பார்த்த பிரவீண் அதிர்ச்சி அடைந்தார்.  6 கி.மீ மட்டுமே வந்துள்ளோம் என்று உங்கள் மீட்டரில் காட்டுகிறது என்பது ரூ.5 ஆயிரத்து 325 கட்டணம் செலுத்த முடியும். இது நியாயமில்லாது. வழக்கமான கட்டணமான ரூ.105 மட்டுமே செலுத்துவேன் என டிரைவரிடம் பிரவீண் கூறியுள்ளார்.

ஆனால், உபர் நிறுவனத்திடம் இருந்து பில் வந்துவிட்டது. இதை செலுத்தாமல் காரில் இருந்து இறங்கக்கூடாது என பிரவீணிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து உபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோதும் பிரவீணுக்கு உரிய பதில் இல்லை. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து போலீசிடம் செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து, பத்ரநாரயணபுரம் போலீஸ்நிலையத்தில் சென்று நடந்த விசயத்தை இருவரும் புகாராகப் பதிவு செய்தனர். இதைக் கேட்ட போலீஸ் அதிகாரி, 6 கி.மீ. தொலைவுக்கு எப்படி ரூ.5 ஆயிரத்து 325 கட்டணம் வசூலிக்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியாத கட்டணம் எனக் கூறினார். இதையடுத்து, போலீசார், உபர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின் உண்மையான தொகையான ரூ.105 மட்டுமே செலுத்த பிரவீணுக்கு உபர் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பியது.

இதைத்தொடர்ந்து பிரவீண் அந்த தொகையை செலுத்திவிட்டு புறப்பட்டார். மேலும், நடந்த சம்பவங்களால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்தால்,  மைசூர் போலீஸ் நிலையத்தில் உபர் நிறுவனத்தி்ன் மீது புகார் அளிக்கப் போவதாகவும் பிரவீண் குமார் தெரிவித்து, புகார் அளித்த நகலைப் பெற்றுக்கொண்டு சென்றார்.  

இதையடுத்து, உபர் நிறுவனம், பிரவீணிடம் மன்னிப்பு கோரியது. தொழில்நுட்ப காரணங்களால், இதுபோல் தவறுநேர்ந்து விட்டது. இதுபோல் மீண்டும் நடக்காது என உறுதி அளித்தனர்.