ஜம்மு காஷ்மீரில் முடிவுக்கு வரும் பயங்கரவாதம்: டிஜிபி தகவல்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்
ஜம்மு காஷ்மீரில் 2023 ஆம் ஆண்டில் 10 உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் இது 110 ஆக இருந்தது என டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். வன்முறையை கைவிட்டு சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்புமாறும் இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குப்வாரா மாவட்டம் ஹந்த்வாராவில் உள்ள மாதா பத்ரகாளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது, அதன் எச்சங்கள் விரைவில் அகற்றப்படும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு உள்ளூர் இளைஞர்கள் 10 பேர் மட்டுமே பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 110 ஆக இருந்தது. நடப்பாண்டில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 10 பேரில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேர் விரைவில் கொல்லப்படுவர். இவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேரவில்லை என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.” என்றார்.
பயங்கரவாதிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன என்றும், இதுபோன்ற கொலைகள் பாதுகாப்புப் படையினருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை என்றும் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். அவர்கள் வன்முறை வழியை விட்டு திரும்பி வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் வித்துள்ளார்.
வரலாறு முக்கியம் முதலமைச்சரே: முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி!
ஜம்மு காஷ்மீர் நிலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், “ஜம்மு காஷ்மீர் முழுவதும் பேரழிவைப் போல தாக்கிய பயங்கரவாதம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, எஞ்சியிருக்கும் எச்சங்கள் விரைவில் அகற்றப்படும். பயத்தின் சூழல் முடிவுக்கு வந்துவிட்டது. எல்லா வயதினரும் சுதந்திரமாக நடமாட முடியும். இன்று அமைதியும், மகிழ்ச்சிய்யும் திரும்பியுள்ளது.” என்றார்.
“வடக்கு காஷ்மீர் கிட்டத்தட்ட பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டுள்ளது. ஆக்டிவாக இருக்கும் பயங்கரவாதிகள் யாரும் அங்கு இல்லை. அவ்வப்போது ஏதாவது செயல்களில் ஈடுபடும் சில பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருக்கிறார்கள். விரைவில் அவர்களும் அகற்றப்படுவார்கள்.” என்றும் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.