வெங்காயம் அதிகம் விளைச்சல் நடைபெறும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதித்தது. இதனால் வெங்காய சப்ளை நாடு முழுவதும் தடுமாறியது. 

இதனால் அதன் விலை மளமளவென உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விலை உயர்வை தடுக்க தன் கைவசம் உள்ள கையிருப்பு வெங்காயத்தை மத்திய அரசு விற்பனை செய்ய தொடங்கியது. 

ஆனாலும் சந்தையில் சப்ளை நிலவரம் திருப்திகரமாக இல்லாமல் இருந்தது. இதனையடுத்து உடனடியாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் உள்நாட்டில் வெங்காய சப்ளை ஓரளவுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

விலையும் தற்போது மிதமான அளவில் உள்ளது. அதேசமயம் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி தடை வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாட்டு மக்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி தடைக்கும், அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? நம் நாட்டின் வெங்காய ஏற்றுமதியில் அதிகம் அந்த நாடுகளுக்குதான் செல்கிறது. 

உதாரணமாக நம் நாடு கடந்த ஆண்டு சுமார் 22 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்தது. அதில் 50 சதவீதத்துக்கு மேல் இந்த நாடுகள்தான் இறக்குமதி செய்தன. அதனால்தான் இந்தியா திடுதிப்புன்னு ஏற்றுமதி தடை விதித்து விட்டதால் அந்த நாடுகளில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏற தொடங்கி விட்டது.
இதனையடுத்து வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் உள்நாட்டில் வெங்காய சப்ளையை அதிகரிக்க சீனா, எகிப்து, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

வங்கதேசத்தின் வர்த்தக கழகத்தின் செய்திதொடர்பாளர் ஹூமாயுன் கபீர் இது குறித்து கூறுகையில், எவ்வளவு விரைவாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியுமா அத்தனை வழிகளையும் ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்