ராயசந்திரா அருகே ஹஸ்கூர் மதுரம்மா கண்காட்சியில் பலத்த காற்றினால் தேர் கவிழ்ந்ததில் லோஹித் என்ற 24 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ராயசந்திரா அருகே வெள்ளிக்கிழமை பலத்த காற்று காரணமாக 120 அடி உயரமுள்ள தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்கூர் மதுரம்மா கோயில் தேரோட்டத்தில் நடந்த இந்த விபத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இறந்தவர் பெங்களூருவின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள ஹஸ்கூர் நகரைச் சேர்ந்த லோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு ஆபத்தில்லை என்றும், ஒருவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரம்மா தேவி கோயிலில் ஒரு வாரம் நடைபெறும் பாரம்பரிய திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் மாலை 6 மணியளவில் தேர் சரிந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. படுகாயத்துடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் லோஹித், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதேபோல், அந்த இடத்திற்கு வந்த மற்றொரு தேரும் கவிழ்ந்தது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன. இரண்டாவது தேர் தொட்டனகமங்கலா அருகே கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு தேர்களும் பரப்பன அக்ரஹாரா பகுதியிலிருந்து ஆனேகல் நோக்கி வந்துகொண்டிருந்தன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் குழுக்கள் வந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டன.
ஆரம்பகட்ட விசாரணை மற்றும் வீடியோக்கள் அடிப்படையில் பார்க்கும்போது வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பெங்களூரு கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சி.கே. பாபா கூறியுள்ளார். பலத்த மழையும் பலத்த காற்றும் வீசியதால் தேர் சரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எஸ்.பி. பாபா உறுதி கூறினார்.
100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மதுரம்மா கோயில் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தத் திருவிழாவில் விவசாயிகள் தேரை இழுக்க தங்கள் டிராக்டர்கள் மற்றும் எருதுகளை கொண்டு வருகிறார்கள். இதனால், இந்த விபத்தில் பல டிராக்டர்களும் சேதமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
