உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 18,601 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 590 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே குடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் தூய்மை பணியாளர்களாக நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இதனால் அந்த ஊழியர் தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரோ அவரது குடும்பத்தினரோ பாதிக்கப்பட்ட நபருடன் எந்தவித நேரடி தொடர்பிலும் இல்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.