சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் உள் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு வகைகளிலும் இந்தியா தயாராக உள்ளது
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் படேல் ஒருமுறை இப்படிக் கூறினார், “நாட்டின் முதல் தேவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு. பாதுகாப்பு இல்லாதவரை நீங்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.” அந்த வகையில், ஒரு நாட்டுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா உள்நாட்டு கிளர்ச்சிகள், வெளிநாடுகளில் இருந்து தூண்டப்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதத்தை சமாளித்து வருகிறது. ஒரு தேசமாக, வெளிப்புற அச்சுறுத்தல்கள் குறித்து நாம் கவலைப்படும் அதே நேரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் முக்கியமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு இரண்டும் கைகோர்த்து ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டும். அமைதியான ஒருங்கிணைந்த நாடாக திறமையுடன் அத்தகைய அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ள முடியும்.
உள் நாட்டு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மற்றும் அதன் குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களில் இருந்து பாதுகாக்க அந்நாட்டின் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் செயல்களைக் குறிக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான பொறுப்பு காவல்துறை, துணை ராணுவப் படைகள் மற்றும் விதிவிலக்கான சமயங்களில் ராணுவத்தின் கைகளில் உள்ளது.
சுதந்திரம் பெற்ற நேரத்தில் இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய உள்நாட்டு சவால் பிரிவினை. அதன் தாக்கங்கள், விளைவுகள் பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்தியது. மேலும், காஷ்மீர் பிரச்சினை, சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பு, சுமார் 80 சதவீதமாக இருந்த வறுமை, 12 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, குறைந்த பொருளாதார திறன், மொழியியல் அமைப்பு மற்றும் பிரிவினைவாத போக்குகள் என பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டது.
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில், சர்தார் படேல் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட பலர் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்திய அதேவேளையில், புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்திற்கான ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அடையாளத்தை வளர்ப்பதில் அரசாங்கம், உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது.
சுதந்திரத்தின் ஆரம்ப கட்டம் முடிவடைந்த பிறகு, நாடு பனிப்போர் பதட்டங்கள், பாகிஸ்தானுடனான 1965, 1971 போர்கள் சீனாவுடனான 1962 போர் ஆகியவற்றை எதிர்கொண்டது. 1947களில் தொடங்கிய காஷ்மீர் பிரச்சினை இன்றளவும் தொடர்கிறது. நக்சல்கள், மாவோயிஸ்ட் பிரச்சினை இன்றளவும் தொடர்கிறது. இருப்பினும், அந்த பிரச்சினைகள இந்தியா திறம்பட கையாண்டு வருகிறது.
ஜூன் 1975 முதல் மார்ச் 1977 வரை நீடித்த இந்தியாவில் அவசரநிலையின் போது, உரிமைகள் மறுக்கப்பட்டு, அதிகாரம் மையப்படுத்தப்பட்டதால், நாடு குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது, மேலும் இது இந்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் ஒன்றாக உள்ளது.
காலிஸ்தான் இயக்கம் என்று அழைக்கப்படும் பஞ்சாபில் சீக்கிய பிரிவினைவாத இயக்கம் 1980கள் மற்றும் 1990 களில் குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சி இயக்கங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு 1979 முதல் தொடர்ச்சியான சவால்களாக உள்ளன.
மேலும், வெவ்வேறு மத மற்றும் இன குழுக்களிடையே. இந்தியா அவ்வப்போது வகுப்புவாத பதட்டங்களை எதிர்கொள்கிறது. இவை உள்நாட்டு பாதுகாப்பு சவால்களுக்கு வழிவகுக்கிறது. அதுதவிர, போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், ஆயுதக் கடத்தல், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவியல் அமைப்புகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
தொழில்நுட்பம் வளரவளர சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் 2000ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ள போகும் முக்கியமான சவாலாக இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இணையதளக் குற்றங்களைக் குறைக்கவும், அதுகுறித்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் தேசிய அளவில் சைபர் குற்றங்களைப் பதிவு செய்ய cybercrime.gov.in என்ற பிரத்யேகப் போர்ட்டல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் சட்டத்தை அமல்படுத்தும் விசாரணை அமைப்புகள் மூலம் இணையதளக் குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகிறது.
இனையதளம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் பணம் பறித்ததாக, மிரட்டியதாக 2019 முதல் 2021 வரையிலான மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 1350 வழக்குகள் பதிவாகியிருப்பதாக தேசியக் குற்றப் பதிவேட்டு அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
அதேபோல், இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்நாட்டு பாதுகாப்பு கவலைகளை அதிகப்படுத்தியது. இருப்பினும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமான தகவல்களை சேகரிக்க அல்லது தேசிய கொள்கைகளை பாதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக புலனாய்வு அமைப்புகளின் ஊடுருவல்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, மற்றும் அவர்களது கூட்டாளிகள் அவ்வப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர்.
1947 ஆம் ஆண்டு முதல் 76 ஆண்டுகள் இந்திய சுதந்திரத்தை நாம் கொண்டாடும் இந்த தருணத்தில் மேற்சொன்னவை நாட்டின் பாதுகாப்புக்க்கு பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. “வேற்றுமையில் ஒற்றுமை” என்று பழங்காலத்திலிருந்தே நாம் கொண்டாடும் இந்தப் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பாதுகாப்பான சூழலை நாம் கொண்டிருக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி, காவல்துறை போன்ற அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பதைத் தவிர, 2008 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டது. அனைத்து உளவுத்துறை அமைப்புகளும் இணைந்த MAC, NATGRID ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்த, இவை தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பாகக் கருதப்படுகின்றன. பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை எதிர்க்கும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஆகியவை இந்தியாவை வலிமையாக்கியுள்ளது.
நாடு முழுவதும் இன்றளவும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், சிகிச்சையை விட முன்னெச்சரிக்கை சிறந்தது என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அமைதியான உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு சூழ்நிலையில் நாடு "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கொண்டாடுகிறது. உள் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு வகைகளிலும் இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது.
