Omar Abdullah alleges security guidelines relaxed for PM seaplane ride
கடல் விமான பயணத்தின் போது பாதுகாப்பு விதி மரபுகளை மீறியதாக பிரதமர் மோடி மீது உமர் அப்துல்லா குற்றம் சாட்டி இருக்கிறார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று முன்தினம் கடல் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
கடல் விமானத்தில் பயணம்
சபர்மதி ஆற்றில் இருந்து தண்ணீரில் மிதக்கும் கடல் விமானம் மூலம் மக்சேனா மாவட்டத்தில் உள்ள தோராய் அணைக்கும், அம்பாஜி கோயிலுக்கும் சென்ற அவர், பின்னர் அதே வழியில் திரும்பினார்.
கடல் விமானம்’ என்பது நீரில் மிதந்தபடி பறந்து செல்லும் திறன் கொண்டது. அது போலவே தண்ணீரில் தரையிறங்கவும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வசதி கொண்டது.
முக்கிய பிரமுகர்கள்
பிரதமர் மோடி பயணம் செய்த விமானம், பைலட்டுகள் மற்றும் விமானப்படையில் பயன்படுத்தும் ஒரு இன்ஜின் கொண்டது. பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் விமானம் இரண்டு இன்ஜின் கொண்டதாகும்.
ஒரு இன்ஜின் கொண்ட விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இந்த விமானங்களை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
காற்றில் பறக்கும் விதிமுறைகள்
ஆனால், விதிமுறையை மீறி நேற்று ஒரு இன்ஜின் கொண்ட விமானத்தை பிரதமர் மோடி பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா புகார் கூறி இருக்கிறார்.
‘‘பிரதமர் நரேந்திர மோடிக்காக விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என அவர்கூறியுள்ளார்.
நிதின் கட்கரி மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள்ளார். ‘‘கடல் - விமானப்பயணம் என்பது இந்தியாவில் புதிய பயன்பாடு. இதற்கான விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை.
விமானப்போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும். எனவே பிரதமர் மோடியின் பயணத்தில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை’’ என தெரிவித்துள்ளார்.
