தனியார் வாடகைக் கார் நிறுவனமான ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க கர்நாடகாவில் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நடுத்தர மக்கள் தற்போது பேருந்து, இரு சக்கர வாகானங்களை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதைவிட செயலி மூலம் இயங்கும் தனியார் வாடகை கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் ஓலா கேப் செயல்பாட்டில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. 
 
இந்நிலையில் ஓலா கேப்ஸ் நிறுவனம், போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று கர்நாடக போக்குவரத்து துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஓலா நிறுவனம் அவசர தொழில்நுட்ப சேவை வாகனங்கள் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றது. மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. ஓலா இந்த சேவையை எவ்வித அறிவிப்புமின்றி செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து 1 வாரத்தில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அந்த நிறுவனம் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. எனவே ஓலா நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஓலா நிறுவனத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் 6 மாதங்களுக்கு கர்நாடகா முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓலா ஓட்டுனர்கள் தங்கள் ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்’’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்து துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து ஓலா நிறுவனம் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்து ஏற்பாடுகள் செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளது.