அந்தமான் கடல் பகுதியில் முதல் முறையாக இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆயில் இந்தியா லிமிடெட் அறிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல் முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசின் எண்ணெய் ஆய்வு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) அறிவித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அந்தமான் கடற்கரை தொகுதியான AN-OSHP-2018/1-ல் ஆய்வு கிணறு தோண்டியபோது இந்த இயற்கை எரிவாயு இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால ஆய்வுக்கு நம்பிக்கை

இது குறித்து ஆயில் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பின் முழு அளவையும் தன்மையையும் அறிந்துகொள்ள அந்நிறுவனம் தற்போது கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மகிழ்ச்சி

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இந்தக் கண்டுபிடிப்பை, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.