அணையில் தவறி விழுந்த செல்போனை எடுக்க 42 லட்சம் லிட்டர் நீரை வீணடித்த அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்
செல்போனை எடுப்பதற்காக அணையிலிருந்து தண்ணீரை வீணாக வெளியேற்றிய அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கு ரூ.53,000 அபாரம் விதிக்கப்பட்டுள்ளது.
தவறி விழுந்த தனது விலையுயர்ந்த செல்போனை எடுப்பதற்காக அணையில் இருந்து 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதற்காக சத்தீஸ்கர் உணவு ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களில் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மூத்த அதிகாரிக்கும் ரூ.53,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கான்கேர் மாவட்டத்தின் கோயிலிபேடா பிளாக்கில் உள்ள உணவு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா அணையின் பரல்கோட் நீர்த்தேக்கத்தில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, அவரது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் தவறி அணையில் இருந்த தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. 15 அடி ஆழத்திற்கு நீரைக் கொண்ட அணையின் ஸ்டில்லிங் பேசின் மீது போன் விழுந்தது.
ராஜேஷ் விஸ்வாஸுக்காக உள்ளூர்வாசிகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றனர். அந்த முயற்சி தோல்வியடைந்ததால், இரண்டு பெரிய 30 ஹெச்பி டீசல் பம்புகள் மூலம் நான்கு நாட்களில் 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினார். இதனால் அப்பகுதியில் உள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமான வீணாகிவிட்டது.
இப்பகுதியில் கோடைகாலங்களில்கூட 10 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. விலங்குகளும் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடிக்கின்றன. இங்கிருந்து செல்லும் கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை, அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
விஸ்வாஸ் தனது தொலைபேசியில் துறை சார்ந்த தரவுகள் இருப்பதால் அதை மீட்டெடுக்க முயற்சிப்பதாக கூறினார். "ஞாயிற்றுக்கிழமை எனது நண்பர்களுடன் அணைக்குக் குளிக்கச் சென்றேன். என் மொபைல் போன் கைநழுவி 10 அடி ஆழத்தில் நீருக்குள் விழுந்துவிட்டது. உள்ளூர்வாசிகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று அடி தண்ணீர் குறைவாக இருந்தால் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம் என்று சொன்னார்கள்." என்கிறார்.
அதனால், "நான் எஸ்.டி.ஓ. திவாரை அழைத்து, அவ்வாறு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அருகில் உள்ள கால்வாயில் கொஞ்சம் தண்ணீர் விட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று அவர் கூறினார். 3-4 அடி தண்ணீர் வடிந்தால் அதனால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று உள்ளூர்வாசிகளின் உதவியைப் பெற்று மூன்று அடி நீரை வெளியேற்றி, எனது செல்போனை திரும்பப் பெற்றேன்" என்று ராஜேஷ் விஸ்வாஸ் சொல்கிறார்.
இது தொடர்பாக ராஜேஷ் விஸ்வாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அணையில் தண்ணீரை வெளியேற்ற அனுமதித்த நீர்வளத்துறை அதிகாரி ஆர். எல். திவார் 24 மணிநேரத்திற்குள் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பட்டது. அவர் ஐந்து அடி வரை தண்ணீரை வெளியேற்ற ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், அதற்கு மேல் நிறைய தண்ணீர் எடுக்கப்பட்டுவிட்டதாவும் திவார் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து திவார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு காங்கர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா பரிந்துரைத்தார். அதன்படி திவாருக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.