ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேபோல், சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருந்தது. இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடமையை செய்ய தவறியதற்காக ஏழு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அனில் குமார் மிஸ்ரா, “இதுவரை 3 ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது. தற்போது ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரது ஆய்வாளர், பராமரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர் பணி நேரத்தில் கடமையை செய்ய தவறியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விழிப்புடன் இருந்திருந்தால், பயங்கர ரயில் விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.” என்றார்.
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி: பயணத்திட்டம் இதுதான்!
தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாலர், கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் பஹனகா பஜார் மற்றும் பாலசோர் ரயில் நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டதன் தொடர்ச்சியாக, இந்த பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோபிநாத்பூர் ரயில் நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது, கோபிநாத்பூர் பாஜக எம்.பி.யும் பிரதாப் சாரங்கியும் அவர்கள் உடனிருந்தார்.
இதனிடையே, விபத்து தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள, மூத்த செக்ஷன் இன்ஜினியர் (சிக்னல்) அருண் குமார் மஹந்தா, செக்ஷன் இன்ஜினியர் முகமது அமீர் கான் மற்றும் டெக்னீஷியன் பப்பு குமார் ஆகியோரது சிபிஐ காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.