மகன் இறந்த செய்தியை நம்பாமல் ஓடிவந்த தந்தை... பிணவறையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்
ஒடிசா ரயில் விபத்தில் மகன் இறந்த செய்தியை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பயணித்து, தற்காலிக பிணவறையில் தன் மகன் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த தனது மகன் விபத்தில் இறந்துவிட்டதை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து, தற்காலிக பிணவறையில் மயங்கிய நிலையில் இருந்த தன் மகனைக் கண்டுபிடித்துள்ளார். மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளித்தபின், மேல்சிகிச்சைக்கு கொல்கத்தாவுக்குக் அழைத்துச் சென்றுள்ளார்.
24 வயதான பிஸ்வஜித் மாலிக்கிற்கு கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் ட்ராமா கேர் பிரிவில் ஒரு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. திங்கட்கிழமை மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அவர் பலத்த காய அடைந்திருந்தாலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித்தின் தந்தை ஹெலராம் மாலிக், வெள்ளிக்கிழமை ரயில் விபத்து செய்தியை அறிந்ததும் தனது மகனை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது சிறிதே நேரமே பேசிய பிஸ்வஜித் பலவீனமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்து தன் மகன் விபத்தில் காயமுற்றாலும் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டிருக்கிறார் ஹெலாம்.
இதனால், உடனே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் அன்று இரவே பாலசோருக்குப் புறப்பட்டார். 230 கிமீ தூரம் பயணித்து அங்கு சென்றபின், எந்த மருத்துவமனையிலும் பிஸ்வஜித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சவக்கிடங்கிற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான உடல்கள் மத்தியில் தன் மகன் பிஸ்வஜித் மயக்கம் அடைந்த் நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக பிஸ்வஜித் ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சில ஊசிகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை மேல் சிகிச்சைக்காக கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவரகள் பரிந்துரைத்தனர், ஆனால் ஹெலராம் மகனை டிஸ்சார்ஜ் செய்து கொல்கத்தாவில் சிகிச்சையைத் தொடர முடிவு செய்தார்.
கொல்கத்தாவிற்கு காரில் செல்லும் நேரம் முழுவதும் பிஸ்வஜித் சுயநினைவின்றியே இருந்தார். ஞாயிறு காலை 8.30 மணிக்கு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவருக்கு, கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மற்றொரு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரது வலது கையில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.
ரயில்வேயில் டச்-அப் வேலை மட்டும்தான் நடக்கிறது! பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
பிஸ்வஜித் சஸ்பெண்டட் அனிமேஷன் என்ற நிலையில் உள்ளார் என மருத்துவர் சோம்நாத் தாஸ் கூறுகிறார். ஏதேனும் அதிர்ச்சியால் இந்த நிலை ஏற்படும் என்றும் அப்போது உயிரியல் செயல்பாடுகளின் தற்காலிக மந்தநிலையில் இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.
முதலில் பிஸ்வஜித் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் சோம்நாத், "காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த அவசரச் சூழ்நிலையில், உடல்களை கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம்" என்று சொல்கிறார். மேலும், மீட்புப் பணிகள் ஈடுபட்டவர்கள் மருத்துவர்கள் இல்லை என்பதால், விபத்து நடந்த இடத்தில் காயமடைந்து கிடப்பவர் சுயநினைவின்றி, பதிலளிக்காமல் இருக்கும்போது இறந்துவிட்டதாக தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் சொல்கின்றனர்.
ரயில் விபத்து பலி எண்ணிக்கையைக் குறைத்துக் கூற முயலவில்லை: ஒடிசா மாநில அரசு விளக்கம்