புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கடந்த 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இது பலரிடையே வரவேற்பையையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. பல மாநிலங்கள் இந்த நடைமுறையை அமல்படுத்திய நிலையில் சில மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் இந்த புதிய சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

நேற்று புவனேஸ்வரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராத தொகை விதித்ததோடு இலவசமாக ஒரு ஹெல்மெட்டையும் அளித்தனர். இனி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்ட கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை புரியவைக்கும் வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.