உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் உதவ மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தரையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வைரலானதை எடுத்து நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், மருத்துவ ஊழியர்கள் உதவ மறுத்ததால், ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைத் தரையிலேயே குழந்தையைப் பிரசவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இரண்டு நர்ஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ஒரு ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு மறுப்பு

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலி காரணமாக ஹரித்வார் மகளிர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இரவு 9:30 மணியளவில் வந்த அவரை, மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர், "இங்கு பிரசவம் பார்க்க முடியாது" என்று கூறி சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதாகவும், இதனால் அந்தப் பெண் மருத்துவமனை வளாகத்தின் தரையிலேயே வலியில் துடித்துக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வித மருத்துவ உதவியும் இன்றி, விடியற்காலை 1:30 மணியளவில் அவர் மக்கள் முன்னிலையில் தரையிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

கீழ்த்தரமான பேச்சு

மறுநாள் காலை மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் உறவினர் சோனி செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் வந்தபோது, அவரை ஒரு படுக்கையில் கூட படுக்க அனுமதிக்கவில்லை என்று அந்தப் பெண்ணும், இன்னொரு உறவினரும் எங்களிடம் தெரிவித்தனர். பிரசவத்துக்குப் பிறகு அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு நர்ஸ்களில் ஒருவர், ‘சந்தோஷமா இருந்ததா? இன்னும் குழந்தை பெத்துக்கப் போறீயா?’ என்று கேலியாகக் கேட்டுள்ளார். யார் இப்படிப் பேசுவார்கள்? குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பேற்றிருப்பார்கள்? தரையில் பிரசவம் நடந்துள்ளது. எந்த நோயாளியையும் இப்படி நடத்தக் கூடாது என நாங்கள் கோருகிறோம். மக்கள் மகிழ்ச்சியில் இங்கு வருவதில்லை, துயரத்தில்தான் வருகிறார்கள்,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

நர்ஸ்களுக்கு நோட்டீஸ்

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், அந்தப் பெண் தரையில் வலியால் அலறுவதும், ஒரு மூதாட்டி அவருக்குப் பின்னால் தாங்கிக்கொண்டு இருப்பதும் பதிவாகியுள்ளது. அருகில் மருத்துவமனை ஊழியர்கள் எவரும் இல்லை.

இதுகுறித்து, தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் ஆர்.கே. சிங் பேசுகையில், “மகளிர் மருத்துவமனையிடம் இருந்து ஒரு ஆரம்பக்கட்ட அறிக்கையைப் பெற்றுள்ளேன். விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன். முதல் தகவல் படி, அந்தப் பெண் இரவு 9:30 மணியளவில் அழைத்து வரப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் 1:30 மணிக்குக் குழந்தையைப் பிரசவித்துள்ளார். வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. எனினும், ஏதேனும் மருத்துவ அலட்சியம் உறுதி செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் டாக்டர் சோனாலி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இரண்டு நர்ஸ்களுக்கும் முறையான நோட்டீஸ் (Adwords) அனுப்பப்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். அவசர நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.