பாலியல் கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியை மிக மோசமாக விமர்சனம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜை,  நடிகை பார்வதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் இந்தி நடிகை ரவீணா டாண்டனும், எம்எல்ஏ ஜார்ஜுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாதிரியார்கள் 5 பேர் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்தார். பேராயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாஸ்திரிகள், கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர்.  பேராயர் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் பலாத்காரம் குறித்து புகார் அளித்தார். 

பேராயர் பிராங்கோ மீது புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பேராயர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மீது இயேசு சபையின் மிஷனரி, தனது உறவினர் ஒருவருடன் கன்னியாஸ்திரி கள்ள உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரத்தில் பேராயர் பிராங்கோவுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ் என்பவர் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சனம் செய்திருந்தார். 

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது நடிகை பார்வதியும், எம்.எல்.ஏ. ஜார்ஜ்-க்கு எதிரக கடுமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த மனிதரின் கருத்து வெறுக்கத்தக்க வாந்தியைப் போன்றது என்றும் அது பற்றி பேசியது போதும். கன்னியாஸ்திரிகளின் தைரியத்துக்கு சல்யூட் என்று நடிகை பார்வதி கருத்து தெரிவித்துள்ளார். 

இதேபோன்று இந்தி நடிகை ரவீணா டாண்டனும், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் களமிறங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏ. ஜார்ஜுக்கு, தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், பிராங்கோ முலக்கல் மற்றும் 2 பேராயர்கள், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்தரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி, புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படியும், அதற்காக ரூ.5 கோடி தருகிறோம் என்று கூறியதாக கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறியுள்ளார்.