பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, இந்த பதவிக்கு பி.கே.மிஸ்ரா தலைமை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை தனக்கு உதவியாக நியமித்தார். அதில், பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாக மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென தனது பதவியை மிஸ்ரா ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக மிஸ்ரா கூறுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக சேவை செய்ததில் பெருமிதம் அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தேச நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் அலுவலக பணியில் இருந்து விலகுவதாக மிஸ்ரா தெரிவித்தார். மேலும் 2 வாரங்களுக்கு பணியில் தொடருமாறு மிஸ்ராவிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தர். எனினும் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து, முன்னாள் அமைச்சரவைச் செயலர் பி.கே.மிஸ்ரா சிறப்புப் பணி அதிகாரியாக பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர்  பதிவில், ‘2014-ம் ஆண்டு டெல்லிக்கு புதிதாக வந்தபோது மிஸ்ரா எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்தார். அவரது எதிர்கால லட்சியம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்,’ என கூறியுள்ளார்.