Now Aadhaar must for opening bank accounts Centre sets deadline for existing customers
வங்கிக்கணக்குடன் ‘ஆதார் எண்ணை’ வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால் வங்கிக் கணக்கு ரத்தாகும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.
மேலும், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கவும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வங்கியில் பரிமாற்றம் செய்யவும் ஆதார் கட்டாயமாக்கி மத்திய நிதி அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
கருப்பு பணம்
நாட்டில் கருப்புபணத்தை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக வருமானவரித்தாக்கல் செய்யும் போது பான் எண்ணோடு, ஆதாரை இணைப்பது, வங்கிக்கணக்குடன் பான் இணைக்கும் நடவடிக்கையாகும்.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுபட்ஜெட்டில், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்வதற்காக, பல பான் எண்களை வைத்திருப்பதைத் தடுக்க நிதி அமைச்சர் ஜெட்லி இதை அறிவித்தார்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல்..
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் 2005-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, “ ஜூன் 1-ந்தேதி முதல், அனைத்து நிறுவனங்கள், தனிநபர்கள்,பாட்னர்ஷிப் நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக வங்கியில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, ஆதார் எண், இணைக்கப்பட்ட பான் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாகும் அல்லது, பார்ம் 60 என்ற படிவத்தில் தெரிவிக்க வேண்டும்’’
ஆதார் கட்டாயம்
மேலும், வங்கிகணக்கு தொடங்க தேவைப்படும் ஆவணங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட சிறு வங்கிக்கணக்குகளில், ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் இப்போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
6 மாதத்துக்குள்
மேலும், ஜூன் மாதத்துக்கு பின் ஒருவர் ஆதார் எண், பான் எண் இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்கி இருந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
டிசம்பர் 31
மேலும், ஏற்கனவே வங்கிக்கணக்கு இருப்பவர்கள், வங்கிப் பரிமாற்றம் செய்பவர்கள், வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள்ளாக தங்களின் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணப்பரிமாற்றம் செய்யும் போது, பான் எண் அல்லது ‘பார்ம்’ 60 அளிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
நிறுவனங்கள்
அதேசமயம், நிறுவனங்களுக்காக வங்கிக்கணக்கு தொடங்கும்போது, மேலாளர்களின் ஆதார் எண் அல்லது, நிறுவனம் சார்பாக வங்கிப்பரிமாற்றம் செய்யும் ஊழியர்களின் ஆதார் எண்ணையும் அளிக்க வேண்டும்.
