உத்தரப்பிரதேச மாநிலத்தில் காரை நிறுத்தாமல் சென்ற ஒரே காரணத்திற்காக, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் ஆப்பிள் நிறுவன துணை பொதுமேலாளர்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் துணை பொது மேலாளர் விவேக் திவாரி. வெள்ளிக்கிழமை இரவு தம்முடன் பணியாற்றும் பெண் தோழியுடன் பாருக்கு சென்று, மது அருந்திய அவர், வீட்டை நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது, கோமதி நகர் பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் விவேக் திவாரியின் காரை நிறுத்த முயற்சித்தனர்.

 

மது குடித்திருந்த காரணத்தால்,  காரை நிறுத்த அஞ்சிய திவாரி, காரை நிறுத்தாமல் போலீசை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிக் குண்டுகள் கார் மீது பட்டதும் உள்ளிருந்த பெண் அலறியதால், கட்டுப்பாட்டை இழந்த விவேக் திவாரி, சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் காரை மோதியுள்ளார். 

பெண்ணுக்கு சிறிய அளவிலான காயமே ஏற்பட்ட நிலையில், படுகாயம் அடைந்த விவேக் திவாரியை போலீசார், அருகில் உள்ள லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விவேக் திவாரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், காரை நிறுத்தாமல் சென்றதற்காக துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் பிரசாந்த் சௌத்ரி மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். 

ஆனால், போலீசாரின் இந்த வாக்குமூலத்தை காரில் பயணித்த பெண் மறுத்துள்ளார். விவேக் திவாரி காரை நிறுத்தாமல் சென்றதால், இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்த போலீசார் இருவரும், காருக்கு முன்னால் வந்து, காரை நோக்கி சுட்டதாகவும், அப்போது துப்பாக்கி குண்டு தாக்கியதாலேயே காரை, மின்கம்பத்தில் விவேக் திவாரி மோதியதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையிலும், விவேக் திவாரி மீது துப்பாக்கிக் குண்டு பட்டது உறுதியானது. 

இந்நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து, உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இருப்பினும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ள விவேக் திவாரியின் மனைவி, தமக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், காவல்துறையிலேயே பணியும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.