பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 

இந்த விவகாரத்தில் மக்களை பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற வன்முறைகளை தடுக்க, புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம் ஆலோசனை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.