ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியில் இருப்போருக்கு சிறப்பான வசதிகள் ஏற்பாடுசெய்து தரும் நோக்கில், அவர்களுக்கு மாற்று ரெயில் பயணத்தை ஏற்பாடு செய்து தர ரெயில்ேவ திட்டமிட்டுள்ளது.

சாதாரண ரெயில்கள் மட்டும் அல்லாது ராஜ்தானி, சதாப்தி ரெயிலும் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் மாற்று ரெயிலில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

விகல்ப் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் இருந்து, ஹவுரா, மும்பை, பெங்களூரு, சென்னை, செகந்திராபாத் செல்லும் ரெயில்களில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, டெல்லியில் இருந்து சென்னை வரும் ரெயிலில் பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்து அது காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இதனால் அவர் முன்பதிவு செய்திருந்த ரெயிலில் பயணிக்க முடியாவிட்டாலும், அவர் தன்னுடைய டிக்கெட்டை ரத்து செய்யத் தேவையில்லை. சென்னை செல்லும் மற்றொரு ரெயலில் அவர் பயணிக்க இடம் அளிக்கப்படும்.

இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த திட்டத்தின் பயன்பாட்டை தீர ஆய்வு செய்தோம். அது பயணிகளுக்கு அதிக அளவில் நன்மை அளித்து வருவது தெரிந்தது. இதையடுத்து, அனைத்து ரெயில்களிலும் இந்த மாற்று ரெயில் வசதி திட்டதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால், காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் குறிப்பிட்ட ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என வருத்தப்படத் தேவையில்லை. அவருக்கு மாற்று ரெயிலில் பயணிக்க வசதி செய்து தரப்படும். இதற்கு கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கமாட்டோம். இனி வரும் காலங்களில் ரெயிலில் காத்திருப்போர் பட்டியலை இருக்காது” என்றார்.

உதாரணமாக ஒருவர் சென்னையில் இருந்து மதுரைக்கு காலையில் குருவாயூர் ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவர் பயணிக்க முடியாமல் போனால், டிக்கெட்டைரத்துசெய்யத் தேவையில்லை. நண்பகலில் புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட்அளிக்கப்படும்.

இந்த திட்டத்துக்காக ரெயில்வே நிர்வாகம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் மூலம், தங்களின் இணையதளத்திலும், மென்பொருளிலும் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த பணிமுடிந்தவுடன் 2017, ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்ததிட்டம் அனைத்து வழித்தடரெயில்களும் அறிமுகப்படுத்தப்படும்