ரோபாட்கள், கணினிகள் மற்றும்  எந்திரங்களின் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்க வாய்ப்பில்லை என்றும், பயிற்சி சார்ந்த, பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும் ரோபாட்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும்  ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அச்சம் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்  தற்போது சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில்  நிதித்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கேரளா அரசு சார்பில் கொச்சி நகரில் நடந்த சர்வதேச டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது  ரோபாட்களிலும், கணினிகளிலும் ஏற்பட்டுவரும் அதிநவீன மாற்றங்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் அனைத்தையும் பறித்துக் கொள்ளும் என தெரிவித்தார். பயிற்சி பெற்று செய்யும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது பயிற்சியின்றி செய்யும் வேலையாக இருந்தாலும் சரி ரோபாட்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்போகிறது.

என்னைப் பொறுத்தவரை அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகலாம். ஏனென்றால், அனைத்து வேலை வாய்ப்புகளையும், கணினியும், ரோபாட்களும் செய்யத் தொடங்கிவிடும் என்றார்.

எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவடையும். அப்போது, நம்மால் ரோபாட்களை பயன்படுத்துவதையும், எந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதையும், கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியாது என்று ரகுராம்ராஜன் தெரிவித்தார்..