வங்கிகளில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ், பேட்டியின் போது கூறினார்.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து அனைத்து வங்கிகளிலும் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றி கொள்ளலாம் என அரசு கூறியது.

அதன்படி கடந்த 3 நாட்களில் ரூ.50 ஆயிரம் கோடி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். கூடுதல் ஏடிஎம் மையங்கள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தபால் நிலையங்களிலும், பணம் வினியோகம் நடந்து வருகிறது.

மேலும், நாளை முதல் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.10,000 வரை எடுப்பதாக கூறப்பட்ட உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டு ரூ.50,000 வரை எடுக்கலாம். அதேபோல் செல்லாத பணத்தை மாற்றும் போது ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம். ஒரு வாரத்தில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். நாளை முதல் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் புதிய ரூ.2000 நோட்டை பெற்று கொள்ளலாம்.

அதேபோல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை வங்கிகள் வசூலிக்க கூடாது. பெட்ரோல் பங்க்குகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம்.

மேலும் நவம்பர் 24ந் தேதி வரை அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள், சுங்க சாவடி, ரயில் நிலையம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்

இவ்வாறு அவர் கூறினார்.