ஆன்-லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பு செய்யும்போது, செப்டம்பர் மாதம் வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரூபாய் நோட்டு தடை கொண்டுவரப்பட்டபோது, மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், டிக்கெட் முன்பதிவின் போது சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரெயில்வே துறையால் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவுசெய்யும் போது, குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.40 வரை சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் அது வசூலிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 23ந் தேதி அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, கடந்த மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னும் மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த சலுகையை ஜூன் 30-ந்தேதி வரை ரெயில்வே நீட்டித்தது.

இந்நிலையில், ரெயில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக கூறுகையில், “ரெயில் டிக்கெட் முன்பதிவின் போது, சேவை கட்டணம் ரத்து என்ற சலுகையை செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை மேலும் ஊக்கப்படுத்த முடியும் என்ற நோக்கில் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதால், ஆண்டுக்கு ரூ.500 கோடி ஐ.ஆர்.சி.டி.சி,க்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் இழப்பீட்டுத் தொகையை கேட்டு நிதி அமைச்சகத்துக்கு ரெயில்வேதுறை கடிதமும் எழுதியுள்ளது.

இது தவிர, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் முயற்சியாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 360 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்வேயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை விரைவில் ரெயில்வே துறை அறிவிக்க உள்ளது.தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பாகத்தான் டிக்கெட்முன்பதிவுசெய்ய முடியும், இனி அது 360 நாட்களாக மாறப்போகிறது. இந்த டிக்கெட்டுகள் 2 அடுக்கு மற்றும் முதல்வகுப்பு ஏ.சி. பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.