ஆம்லேட்டில் உப்பு இல்லாததால், பார் மற்றும் கேன்டீன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் செல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம செல்லும் வழியில் உள்ளது திருபுவனை. அதன் அருகில் ஆண்டியார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கேன்டீனுடன் கூடிய தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாருக்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த இருவர் மது குடிக்கச் சென்றுள்ளனர். மது போதையில் இருந்த அவர்கள், கேன்டீன் ஊழியரிடம் ஆம்லேட் கேட்டுள்ளனர்.  

சிறிது நேரத்தில் அவர்களிடம் ஆம்லேட் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஆம்லேட்டில் உப்பு இல்லை என்று கூறி, ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து, வேறு ஆம்லேட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆம்லேட்டில் உப்பு அதிகமாக இருப்பதாகக் கூறி மீண்டும் அவர்கள் ஊழியரிடம் தகராறு செய்தனர். இந்த நிலையில் அவர்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் எங்களிடமே உங்கள் வேலைய காட்டுறீங்களா? நான் யார் என்று உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்கள் கூறி சென்றுள்ளனர். பிரச்சனை அத்துடன் முடிந்ததாக நினைத்து கேன்டீன் உரிமையாளர்கள், போலீசில் ஏதும் புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில் அந்த நபர்கள், நேற்று மாலை பாருக்கு வந்துள்ளனர். தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கேன்டீன் மீதும் பார் மீதும் வீசிச் சென்றனர். பயங்கர சத்தத்தோடு வெடித்த அந்த குண்டுகளால் பாரில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது பாரில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பார் அருகில் நின்றிருந்த பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.

பார் ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கு வெடிக்காத நாட்டு வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தன. அதில் நாட்டு வெடிகுண்டுகள் வீசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. 

நாட்டு வெடிகுண்டுகளை வீசியது, விழுப்புரம் கோலியனூரைச் சேர்ந்த பிரபா, ரவுடி தீனா மற்றும் எல்.ஆர். பாளையத்தைச் சேர்ந்த சுகுமார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் பிரபா, ரவுடி தினாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.