ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை, என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், ரயில்வேயில் உள்ள சில பிரிவுகள், தனி நிறுவனங்களாக மாற்றப்படும். மேலும், ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்களுக்காக தனியார் முதலீடுகள் கோரப்படும் என்று கூறினார். 

மக்களவையில் ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நாட்டில் கடந்த 1950-ம் ஆண்டில் 77 ஆயிரத்து 609 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு இருந்தது. இது, 2014ம் ஆண்டுக்குள் 89 ஆயிரத்து 919 கிலோ மீட்டராக உயர்ந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த  தூரம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 236 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 

ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரயில்வேயை தனியார் மயமாக்க மாட்டோம். எனினும், ரயில்வேயில் வசதிகளை  அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கான முதலீடு நமக்கு தேவை. எனவே, பொதுமக்கள் - தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், ரயில்வேயின் சில பிரிவுகள் பெரு நிறுவன மயமாக்கப்படும். நாட்டு நலனில்  அக்கறை கொண்டு புதிய திட்டங்கள், புதிய வழிகள் கொண்டு வரும்போது முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுவார்கள். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் அது  வடிவமைக்கப்பட்டது. 

அரசியல் ஆதாயத்துக்காக புதிய ரயில்கள் குறித்த கனவுகளை மக்களிடையே  விதைத்தனர். காங்கிரஸ் ஆட்சியின்போது ரேபரேலியில் உள்ள நவீன ரயில்வே தொழிற்சாலையில் ஒரு ரயில் பெட்டி கூட தயாரிக்கப்படவில்லை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடந்த 2014 ஆகஸ்டில் முதல் ரயில் பெட்டி அங்கு தயாரிக்கப்பட்டது. இதுதான்  வெற்றி பெற்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. தோற்றவர்கள் கஷ்டங்களை மட்டுமே பார்க்கின்றனர். வெற்றி பெறுபவர்கள் இலக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.